இலங்கையில் 25 மற்றும் 29 வயதுக்கு உட்பட்டவர்களில், 9.2 சதவீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி இருப்பதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் கற்றவர்களில் 7.2 சதவீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர்.இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களில் 9.1 சதவீதமானவர்கள், தொழில் வாய்ப்பு
இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின் படி, நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பத்தின் உணவு தேவைகளுக்காக மாத்திரம் மாதமொன்றுக்கு 44,020 ரூபாய் தேவைப்படுகிறது.இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் தொழில்வாய்ப்பின்மை பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளது என அறியமுடிகிறது. ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளனர்.

இதேவேளை, அரச ஊழியர்கள் எவரும் அடுத்தவருடம் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்க முடியுமான பல தொழிற்சாலைகள் வடக்கில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் காரணமாக யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, சீமெந்து தொழிற்சாலை முற்றாக செயலிழந்தது.சுமார் 29 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் இந்த தொழிற்சாலை சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மூடப்பட்டதையடுத்து, சுமார் 1,500 ஊழியர்கள் வேலை இழந்து நிர்க்கதியாகினர்.முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான், பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழிற்சாலை 1968 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதின்று திறந்து
வைக்கப்பட்டது.

நாட்டின் ஓடுகளின் கேள்வியை நிவர்த்தி செய்வதற்காக திறந்துவைக்கப்பட்ட
இந்த தொழிற்சாலையில், அன்று 74 நிரந்தர ஊழியர்களும் 100 க்கு மேற்பட்ட தற்காலிக
ஊழியர்களும் பணிபுரிந்தனர்.பலரின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாகவிருந்த
ஓட்டுத்தொழிற்சாலை யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு முற்றாக செயலிழந்தது.

தீவகம் அல்லைப்பிட்டி அலுமினிய தொழிற்சாலை, வலிகாமம் வடக்கு மாவிட்டபுரத்தில் உள்ள
அலுமினிய தொழிற்சாலைகள், யுத்தத்தின் பின்னர் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. இந்த
தொழிற்சாலைகளிலும் நூற்றுக்கணக்கானவர்கள் தொழில்புரிந்து வந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.