திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பிரதேசத்தின் ஆற்றைக் கடப்பதற்கு இலங்கைக் கடற்படையினரால் இலவச படகு சேவை, இன்று (25) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணி நடைபெற்று வரும் நிலையில், அவ் ஆற்றைக் கடந்து செல்வதற்காகக் கிண்ணியா நகர சபையால் தனியார் ஒருவருக்கு இழுவைப் படகு மூலம் கட்டணம் செலுத்தி, படகு சேவை நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், அப்படகு பாடசாலை மாணவர்கள் உட்பட பலருடன் செவ்வாய்கிழமை (23) பயணித்த நிலையில், விபத்துக்குள்ளாகி மாணவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்கின் பணிப்புரைக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கைக் கடற்படையின் படகு சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட படகில் ஆகக்கூடிய தொகையாக 25 பேர் வரை பயணிக்க முடியும் எனவும் பயணிகள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் தனித் தனியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்படகு சேவையை,  திருகோணமலை கடற்படையினர் மேற்பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.