ஆனந்தி அண்ணர்:
தேவை உணர்ந்து வாழ்ந்த அரசியற் கடமையாளன்

— குரு இரத்தினலிங்கம்

அரசியல் என்றால் என்னவென்ற கேள்விக்கு, தான் சார்ந்த சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது, என்பதே பொருத்தமான பதிலாக இருக்கும்.

அவ்வாறான சமூகப் பணியை, அரசியலை, பலர் அதுவே தமது வாழ்க்கை என்கிறார்கள். குறிப்பிட்ட சிலர் மட்டுமே சமூகப் பணியை, அரசியலை, வாழ்வின் கடமை என்று எண்ணிச் செயற்படுகின்றனர்.

அரசியல்தான் எமது வாழ்க்கை என்று கூறிக் கொள்பவர்களால்தான் அரசியல் இன்று சாக்கடையாக்கப்பட்டுள்ளது. தம்மால் இயலாத காலத்திலும்கூட அரசியலைக் கைவிட, கைமாற்ற துணிகிறார்கள் இல்லை. தமது அந்திம காலத்தை எண்ணி அச்சப்படுகிறார்கள். அரசியல் வரப்பிரசாதங்களை இழக்க மனமின்றியுள்ளனர்.

அரசியலை கடமையென்று கருதும் மனிதர்கள் சொற்பமாக இருப்பினும், அவர்கள் தனித்துவமானவர்களாகவும் முன்னுதாரணமானவர்களாகவும் வாழ்கிறார்கள் அல்லது வாழ்ந்து மறைந்தும் வாழ்கிறார்கள் எனலாம். அரசியலை கடமையாக மட்டும் எண்ணும் ஒரு மனிதன் தனது பணியைத் தேவைப்படும் நேரங்களில், தேவைப்படும் இடங்களில் நிறைவேற்றவும் தேவைப்படாதவிடத்து தவிர்க்கவும் என்றுமே தயங்குவதில்லை.

தனது கிராமத்திற்கான, பிரதேசத்திற்கான, தேசத்திற்கான, இனத்திற்கான சமூகப் பணியை கடமையாக எண்ணி, மதித்து நிறைவேற்றிய அற்புதமான மனிதரே – வடமராட்சி கொம்மாந்துறையைப் பூர்வீகமாகவும், யாழ்ப்பாணம் கல்லுவம் கிராமத்தை வாழிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சதானந்தம் (ஆனந்தி அண்ணர்) அவர்கள் ஆவார்.

எழுபத்தாறு வயதில் இயற்கை எய்தும் வரையிலும், அன்றாட வாழ்வியலில் தமிழ் மக்கள் சந்தித்த நெருக்கடிகளில் இருந்து மீண்டெழுந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும், இனத்தோடு இணைந்து பயணித்த இனப் பற்றாளர் ஆனந்தி அண்ணர் என்றால் மிகையாகாது.

இளவயதில், தன்னார்வத்துடன், தனது கிராமத்தினதும், கல்வி கற்ற பாடசாலையினதும் முன்னேற்றத்தில் அதீத அக்கறையுடன் செயற்பட்ட அவர் – கிராமத்தின் தபாலகத்துக்கு வரும் அரச வர்த்தமானியை தவறாது தேடி தகவல் திரட்டும் இளைஞராக அன்றைய நாட்களில் விளங்கினார்.

அந்த தகவல்களை வைத்துக்கொண்டு – அரச கட்டமைப்பின் ஊடாக பெற்றுவிடக்கூடிய நன்மைகளைத் தனது சமூகத்திற்குப் பெறுவதில் ஆர்வம்கொள்ளத் தன்னைச் சுற்றியிருந்த அனைவரையும், குறிப்பாக சக வயது இளைஞர்களை ஊக்கப்படுத்துபவராக ஆனந்தி அண்ணர் இருந்தார்.

கிராமத்தில் இயங்கிய முன்பள்ளிக்கு தேவையான சத்துணவைப் பெற்றுக் கொள்வதன் மூலம் ‘காந்தீயம்’ தொண்டு அமைப்புடன் ஏற்படுத்திக் கொண்ட அவரது தொடர்பு தொடர்ந்து வலுப்பெற்றதன் மூலம் – பின்னர் ‘காந்தீயம்’ அமைப்பின் முதன்மைச் செயற்பாட்டாளராகவும் காந்தீயத்தின் யாழ் மாவட்டப் பொறுப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

1977 ஆம் ஆண்டு பேரினவாத வன்முறைகளால் விரட்டியடிக்கப்பட்டு, ஆதரவற்றவர்களாக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களை வடக்கிலும் கிழக்கிலும் பல பகுதிகளிலும் மீளக் குடியமர்த்தி, அவர்கள் அனைவருக்கும் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டில் ‘காந்தீயம்’ அமைப்புடன் இணைந்து செயற்பட்டவர்களுடன் ஆனந்த அண்ணர் நெருக்கமானார்.

அதே போல – கிழக்கில் இயற்கை அனர்த்தத்தால் பேரழிவைச் சந்தித்த மட்டக்களப்புப் பிரதேசத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களுடனும் அவருக்கு ஏற்பட்ட உறவுகள், அவரைத் தமிழ் தேசிய இன விடுதலைச் சிந்தனையுடன் செயற்பட வைத்ததுடன், தேசிய இன விடுதலைச் சிந்தனை கொண்ட இளைஞர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

சாந்தமான அவரது குணம், மிக எளிமையான நடைமுறை, அயராத செயற்பாடு, இரகசியங்களை பாதுகாப்பதில் அவர் காட்டிய உறுதி என அனைத்துமே – நாளடைவில் அவரைச் சுற்றியிருந்தவர்களின் மத்தியில் அவர் மீது பெரும் மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

அக் காலத்தில் காந்தீயம் அமைப்புடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் தலைவரான உமாமகேஸ்வரன் மற்றும் இன்னொரு தொடக்க கால உறுப்பினரான சந்ததியார் போன்றோருடன் வலுவான தொடர்புகள் ஆனந்தி அண்ணருக்கு ஏற்பட்டன.

தமிழ் மக்களது விடுதலைக்காகச் செயற்பட்ட அமைப்புகளும் அதன் உறுப்பினர்களும் தொடர்ச்சியாகச் சந்தித்துவந்த நெருக்கடிகளைப் போல ஆனந்தி அண்ணர் அவர்களும் நெருக்கடிகளைச் சந்திக்கத் தொடங்கினார்.

‘காந்தீயம்’ அமைப்பு சிறீலங்கா அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரகடணப்படுத்தப்பட்டு அதன் தலைவர்களான மருத்துவர் இராஜசுந்தரம் மற்றும் டேவிட் அய்யா ஆகியோர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆனந்தி அண்ணரும் தேடப்படத் தொடங்கினார்.

இந்த வேளையில் தன்னைத் தலைமறைவு வாழ்க்கைக்கு மாற்றிக் கொண்ட ஆனந்தி அண்ணர், அதுவரை ‘காந்தீய’ வழிமுறைகளில் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மாற்றாக – ஆயுதப் போராட்டம் ஒன்றின் தேவைக்கான நியாயங்களை மனமார ஏற்றுக்கொண்டவராகவும் மாறினார்.

அதன் விளைவாக – ஏற்கெனவே வலுப்பெற்றிருந்த தொடர்புகளின் ஊடாக, உமாமகேஸ்வரனின் தலைமையை ஏற்று புளொட் அமைப்புடன் தன்னை முழுமையாக அவர் இணைத்துக்கொண்டார்.

ஆனந்தி அண்ணரிடம் இருந்த முதிர்ச்சி, நிதானம், ஞானம், தேர்மை என்பவற்றால் ஈர்க்கப்பட்ட உமாமகேஸ்வரன் – 1983ஆம் ஆண்டில், புளொட் அமைப்பின் நிர்வாகச் செயலாளராகவும், பின்னர் மேலதிக பொறுப்பாக, இயக்கத்தின் பொருளாளராகவும் ஆனந்தி அண்ணரை நியமித்தார்.

1987இல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பின்பு விடுதலைப் போராட்டத்திற்கான மார்க்கங்கள் மாற்றமடைந்ததற்கமைய – புளொட் அமைப்பும், தனது அரசியல் பிரிவை ‘ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி’ எனும் அரசியல் கட்சியாக இலங்கைத் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்து கொண்ட பின்பு – அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காகத் தமிழ்நாட்டில் தங்கியிருந்த ஆனந்தி அண்ணரை நாட்டுக்கு வரவழைத்து, கட்சியின் செயலாளராக நியமித்தார் உமாமகேஸ்வரன்.

தனது கொள்கையிலும், நிதியுடன் தொடர்புபட்ட செயற்பாடுகளிலும் அவர் கொண்டிருந்த பற்றுறுதியுடனான நேர்மையான செயற்பாடுகள் காரணமாக அவர் மீது அனைவரும் கொண்டிருந்த நம்பிக்கை ஒன்றே ஒரு கட்சியின் செயலாளர் பொறுப்பு அவரைத் தேடி வந்ததன் காரணமாகும்.

உமாமகேஸ்வரன் அவர்களின் மறைவுக்குப் பின்பு, ஏற்கெனவே ஏற்றிருந்த அரசியற் கட்சியின் தலைமைப் பொறுப்போடு – புளொட் அமைப்பினது தலைமை பொறுப்பையும் சித்தார்த்தன் அவர்கள் ஏற்றுக்கொண்டதன் பின்னர் – அகத்திலும் புறத்திலும் இருந்து எழுந்த பல்முனை நெருக்கடிகளையும் எதிர்கொண்டு அமைப்பை வளர்த்துச் செல்வதற்கு, சித்தார்த்தன் அவர்களுக்கு உற்ற துணையாக ஆனந்தி அண்ணர் அவர்கள், தனது இறுதி மூச்சு வரை பக்கத்தில் நின்றார்.

தனது இறுதி நாள் வரை, தனது சொந்த விருப்பு வெறுப்புகள் ஏதுமின்றி மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்ட அவரது வாழ்வியல்பு, இன்று அரசியலில் இருக்கும் அனைத்துச் செயற்பாட்டாளர்களுக்கும் ஒர் எடுத்துக்காட்டு ஆகும்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளில் சமரசத்திற்கு இடமில்லாத உறுதியான கொள்கை, விடுதலையை நோக்காகக் கொண்ட அமைப்புகளிடையேயான ஐக்கியம் என்பவற்றைத் தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் தொடர்ந்து அவர் வலியுறுத்தி வந்தார்.

விடுதலை உணர்வுக்கும் அப்பால் அவர் பலதுறைகளில் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். இடதுசாரிக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்த அவர் கலைகளை இரசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். கணணி மூலமான செயற்பாடுகள் ஆரம்பமான காலங்களிலேயே தேர்ந்த பக்க வடிவமைப்பாளராக திகழ்ந்தார். யோகா கலையை கற்றுணர்ந்திருந்த அவர் தான் அறிந்ததை ஏனையோருக்கு சொல்லிக் கொடுப்பவராக விளங்கினார்.

இளவயது முதல் விவசாயத்தில் நாட்டமுள்ளவராக விளங்கிய ஆனந்தி அண்ணர், உவர்த்தன்மை கொண்ட வல்லைவெளிக்கருகில் வெற்றிகரமாகப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட ஒருவராக இருந்தார். விவசாயத்தில் காலத்திற்கேற்ப தொழில்நுட்ப விடயங்களை புகுத்த வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனை கொண்டவராக இருந்த அவர், இன்று அதிகம் பேசப்படும் சேதனப் பசளை விவசாயத்தை பல காலத்திற்கு முன்பே ஊக்கப்படுத்திய ஒருவராக விளங்கினார். வடக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சில் குறிப்பிட்ட காலம் விவசாய அமைச்சரின் இணைப்புச் செயலாளராக செயற்பட்ட அவர் பொருத்தமான, பயனுள்ள ஆலோசனைகளை வழங்கும் ஒருவராகவும் இருந்தார்.

தமிழ் மக்களின் விடுதலைப் பயண வரலாற்றை வெளிக் கொணரும் ஆவணங்களின் பாதுகாப்பில் எப்போதும் அதிக சிரத்தை எடுத்துக் கொண்ட ஆனந்தி அண்ணர், குரும்பசிட்டி கனகரட்ணம் தம்பதிகள் நீண்டகாலமாகப் பாதுகாத்த ஆவணங்களை தொடர்ந்தும் பாதுகாக்க முடியாத ஒரு தருணத்தில், அவர்களது பணி தொடர்ந்து சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல அனைத்து வழிகளிலும் உதவி புரிந்திருந்தார்.

தனது பொது வாழ்வில் பல அமைப்புகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயற்பட்ட அவர், தனக்கென எந்த ஆதாரத்தையும் தேட விரும்பாத உன்னதமானவர். இடப்பெயர்வுகள், தலைமறைவு வாழ்க்கை என காலங்கள் நகர்ந்தபோதும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை செவ்வனே நிறைவேற்றியவர்.

புனர்வாழ்வு அமைப்பின் செயற்பாட்டாளராக, ஆயுதப் போராட்ட அமைப்பின் உறுப்பினராக, அரசியல் கட்சியின் செயலாளராக மூன்று வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாக செயற்பட்டு எம்மை விட்டுப் பிரிந்துள்ள ஆனந்தி அண்ணரின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரிந்து கொள்ளும் ஒருவரால், தமிழ் மக்களின் விடுதலைப் போரட்டத்தின் தொடர்ச்சியான பரிணாமங்களையும் புரிந்து கொள்ளமுடியும்.

அண்மைக் காலமாகவே, தனது வயது மூப்பின் காரணமாக – தனது வசமுருந்த பொறுப்புகளை அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்க விரைத்து ஆவன செய்யுமாறு கட்சித் தலைவர் சித்தார்த்தன் அவர்களிடம் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்

தனிமனித ஒழுக்கம், ஏற்ற பொறுப்பில் நிறைவாய் பணி செய்தல் என்பவற்றில் சிறந்த உதாரணமாய் விளங்கிய ஆனந்தி அண்ணரைப்போல வாழ்வதன் மூலம் மட்டுமே அவருக்கான அஞ்சலிகளை அர்த்தமாக்க முடியும் என்பதுடன், இனத்திற்கான தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.

– ‘ஈழநாடு’ (நவம்பர் 27, 2021)