காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) அதி சிரேஷ்ட உறுப்பினரும் பொதுச்செயலாளருமான அமரர் சுப்பிரமணியம் சதானந்தம் (தோழர் ஆனந்தி அண்ணர்) அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் யாழ் நாச்சிமார்கோவிலடி சரஸ்வதி மண்டபத்தில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமாகி 1.30 மணிவரையில் நடைபெற்றது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா கஜதீபன் அவர்களின் தலைமையில் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் திருமதி தேவி சதானந்தம் அவர்கள் நினைவுச் சுடரினை ஏற்றி வைத்தார்.
கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தோழர் ஆனந்தி அண்ணர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் குரு, வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், தமிழ் தேசியக்கட்சியின் செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் சுகு சிறீதரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் நினைவுரை நிகழ்த்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நினைவுரை ஆற்றியதுடன், நன்றியுரையினை கழகத்தின் பொருளாளர் க.சிவநேசன்(பவன்), வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கேதீஸ்வரன் ஆகியோர் ஆற்றினார்கள்.
நிகழ்வில் கழகத்தின் உபதலைவர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், கட்சியின் நகரசபை, பிரதேச சபை தவிசாளர்கள், அங்கத்தவர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், தோழர் ஆனந்தி அண்ணர் அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டிருந்தனர்.