வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டு இராணுவத்தினுடைய அராஜக செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளதாக தெரிவித்த சிவகுரு ஆதீன குருமுதல்வர் வேலன்சுவாமிகள், எனவே வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும் எனவும் கூறினார்.

  முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் இராணுவத்தினரால் தாக்கப்பட்டமையைக் கண்டித்து, இன்று (28) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயகத்தினுடைய நான்கு தூண்களிலே ஒன்றாகும். அந்த ஊடக சுதந்திரம் எந்த தேசத்திலே மறுக்கப்படுகின்றதோ அங்கே அராஜகம், பயங்கரவாதம் தலைதூக்கி ஆடுகின்றது என்றார்.

ஆகவே எங்களுடைய வடக்கு, கிழக்கு தமிழர்களுடைய மரபுவழித் தாயகத்திலே, சுயநிர்ணய உரிமையைக் கொண்டிருக்கக் கூடிய தமிழினம், தமிழ்த் தேசிய அடிப்படையிலே அறவழியிலே பயணித்துக் கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்த அவர்,  தமிழினம் தனது நீதிக்காக நீண்ட நெடும் பயணத்தில், பல ஊடகவியலாளர்மீதான அடக்குமுறைகள், அராஜகங்கள், பயங்கரவாதங்கள் என்பவற்றைக் கண்டிருக்கின்றது எனவும் கூறினார்.

“அவ்வாறான அடக்குமுறைகளும் அராஜகங்களும், பயங்கரவாதங்களும் ஸ்ரீலங்கா அரசஇயந்திரங்களான இராணுவம், பொலிஸார் மற்றும் ஏனைய கட்டமைப்புக்கள் ஊடாக காலங்காலமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

“அந்தவகையிலே, ஊடகவியலாளர் விஸ்வச்சந்திரன் ஊடகசுதந்திரத்தையும், நடுநிலைமையையும், தர்மத்தையும் பேணிப் பாதுகாத்து அச்செய்திகளை சரியான விதத்திலே முன்னெடுத்துவரும்போது அவர்மீது காட்டுமிராண்டித்தனமாக, பயங்கரவாதமாக பனைமட்டையிலே முட்கம்பியைச்சுற்றி இராணுவத்தினர் தாக்கியிருக்கின்றார்கள். அதனைக் கேட்கும்போதே மனம் மிகுந்த வேதனை அடைகின்றது” என்றார்.

எங்களுக்காக, எங்களுடைய உறவுகளுக்காக தங்களுடைய இன்னுயினை ஈந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் தியாகங்கள் அனைத்துத்து மக்களின் மனங்களிலும் இருக்கும்போது, அவ்வாறு எங்களுக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம்செய்தவர்களை நினைவுகூருகின்ற உரிமை மறுக்கப்படுகின்றது எனவும் கூறினார்.

“ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன்மீது கடுமையான தாக்குதல்களை நடாத்திய இராணுவத்தினர் உடனடியாகக் கைதுசெய்யப்படவேண்டும். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்தத் தேசத்திலே ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக இயங்கமுடியும்.

“ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஊடகசுதந்திரத்தைப்பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்திலே, சர்வதேசமே எங்களுடைய இனத்தினுடைய நிலைமையினை அவதானித்துக் கொண்டிருக்கின்ற நிலையிலே, ஊடகவியலாளர்கள்தான் சர்வதேச நடுகள் மத்தியில் இங்குள்ள விடயங்களை எத்துச்செல்கின்றனர்.

“இதன்பிறகு எந்தவொரு ஊடகவியலாளருக்கும் எந்தவொரு அநீதியும் இழைக்கப்படக்கூடாது. அப்படி இழைக்கப்பட்டால் அவர்கள் தாங்களாகவே, இயல்பாகவே பொங்கி எழுந்து, நிச்சயமாக தமது எழுச்சியினைக் காட்டுவார்கள்.

“அத்துடன், இந்த அராஜகங்கள் அனைத்தையும் மேற்கொள்கின்ற இந்த இராணுவம் வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் தேவையில்லை. தமிழர் தாயகத்திலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என கடுமையான வேண்டுகோளாக முன்வைத்துக்கொள்கின்றேன்” என்றார்