சுன்னாகம் தபாலக கட்டிட பணி முடிவடைந்து விட்டதாக முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் அமைச்சிற்கு அறிவித்துள்ளார். அதே வேலைத்திட்டம் இடைநிறுத்தப்படுவதாக புதிய அரச அதிபர் க.மகேசனால், ஒப்பந்தக்காரருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிற்கு சேர வேண்டிய அபிவிருத்தி திட்ட பணத்தை வீணாக்கும் அரச அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
25.11.2021 நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுன்னாகம் பகுதியில் தரம் 1 வகை தபாலகம் இயங்கி வருகிறது. அதன் கீழ் 10 உப தபாலகங்கள் செயற்படுகின்றன. அந்த தபாலகம் பாழடைந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. அந்த பகுதி மக்கள் பணம் திரட்டி, அந்த காணியை கொள்வனவு செய்திருந்தார்கள். அதில் புதிய கட்டிடம் அமைக்கும் கோரிக்கை மிக நீண்டகாலமாக உள்ளது. எனது தந்தையாரும் அந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
முன்னைய அரசின் தேசிய ஒருமைப்பாடு அரச கருமங்கள் அமைச்சர் மனோ கணேசனிடம் நான் கேட்டதற்கிணங்க, 26.5 மில்லியன் ரூபா ஒதுக்கி, 2019ஆம் ஆண்டு நான் அடிக்கல் நாட்டினேன். அந்த பணம் ஒதுக்கிய போதுகூட பிரச்சனையிருந்தது. எமது கூட்டமைப்பிலிருப்பவர்களே, அந்த பணத்தை கொடுக்க வேண்டாமென அவரிடம் கேட்டுள்ளனர். அதையும் மீறி அவர் அந்த பணத்தை ஒதுக்கினார்.
புதிய கட்டிடத்திற்கான ஒப்பந்தம், அப்போதைய யாழ் மாவட்ட செயலாளர் நா.வேதநாயகனால், அபிசன் கட்டுமான உரிமையாளர் கோமகனுடன் செய்யப்பட்டுள்ளது. 6 மாதங்களிற்குள் அது முடிக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த ஒப்பந்த பெறுகையில் முரண்பாடுகள் உள்ளதாக தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் வேலையை தொடர விட்டார்கள்.
2020 தை 20ஆம் திகதி தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளருக்கு, அரச அதிபர் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். தபாலகம், தபாலதிபர் தங்குவதற்கான அமைப்பு வேலைகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது என்றும், 78 இலட்சம் பணம் செலவிடப்பட்டுள்ளது என்றும், இன்னும் 185 இலட்சம் ரூபா பணம் சிட்டைக்கு வழங்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
வேலை முடிந்து விட்டதாக அவர் அன்று சொல்லியிருந்தார்.
அதற்கு பின் அரச அதிபராக வந்த க.மகேசன், 31.08.2020 திகதியிட்ட கடிதத்தில், நிதி பற்றாக்குறை காரணமாக ஒப்பந்தம் முடிக்கப்படுவதாக அறிவித்திருந்தார்.
முன்னாள், இன்னாள் அரச அதிபர்களிற்கிடையிலான முரண்பாட்டை நாம் பார்க்க முடிகிறது.
அதிகாரிகளின் முரண்பாட்டினால் திட்டங்கள் பாழடிக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இன்று ஊழல் மோசடி பேச்சு வந்தாலே அரசியல்வாதிகளின் பக்கம் கை செல்லும். இந்த அதிகாரிகள் ஏற்படுத்தும் நிர்வாக சீர்கேடுகள், அதனால் மக்களிற்கு செல்ல வேண்டிய திட்டங்கள் பாழாகுவது பற்றி எவருமே பேசுவதில்லை என்றார்.