2015ஆம் ஆண்டு முதல் லிட்ரோ, லாஃப் சமையல் எரிவாயு நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்ட 233 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியுள்ளன எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, எனினும் தற்போது சமையல் எரிவாயு
சிலிண்டர்களின் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்திருப்பதை ஏற்றுகொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் எரிவாயு வெடிப்புகளுக்கு நீண்டகால, குறுகிய கால தீர்வுகளை மொரட்டுவை
பல்கலைக்கழகம் இவ்வாரம் வழங்க உள்ளதாகவும், எரிவாயுக்களை பரிசோதனை செய்யும்
ஆய்வுகூடங்கள் இலங்கையில் இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றித்தின் நேற்றைய (29) அமர்வில் கலந்துகொண்டு அமைச்சின் அறிவிப்பை
வெளியிட்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், சமையல் எரிவாயு வெடிப்பு சம்பங்கள் தொடர்பில் சபையில் தொடர்ந்து பேசப்படுகிறது. இதனை நிறுத்த வேண்டும் என்பதே எமது விருப்பம்.

2015ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் இறுதி வரையில், லிட்ரோ, லாஃப் சமையல் எரிவாயு நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்ட 233 சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளன என சுட்டிக்காட்டினார்.தற்போது சிலிண்டர் வெடிப்புக்கள் குறுகியக் காலத்துக்குள் அதிகரித்துள்ளது என்பதை ஏற்றுகொள்கிறோம்.

சில மாதங்களுக்கு முன்பு லிட்ரோ நிறுவனம் 18 லீற்றர் சிலிண்டரை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு நுகர்வோர் அதிகாரசபை தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தது என்றார். சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் பரிசோதிப்பதற்கு பல்வேறு அரச நிறுவனங்களுக்குப் பொறுப்புகள்
இருக்கின்றன. எனினும், இதுவரையில் எந்தவொரு நிறுவனங்களும் சமையல் எரிவாயுவின்
தரங்களை பரிசோதனை செய்ததில்லை.

எனது அமைச்சுக்குக் கீழ் உள்ள நுகர்வோர் அதிகாரசபைக்கும் இந்த பொறுப்புக்கள் இருக்கின்றன. எனினும் 2011ஆம் ஆண்டுவரையில் நுகர்வோர் அதிகாரசபையும் நூற்றுக்கு நூறு சதவீதம் பரிசோதனைகளை செய்ததில்லை எனவும் தெரிவித்தார்.

சமையல் எரிவாயு தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு
ஆய்வுகூடமும் இலங்கையில் இல்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெற்றுகொள்ளப்பட்ட 11 சமையல் எரிவாயு மாதிரிகள் தொடர்பான பரிசோதனைகளை பெற்றோலியக் கூட்டத்தாபனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை அறிக்கை மொரட்டுவை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பட்டுள்ளது என்றார். இது தொடர்பில் ஆராய ஜனாதிபதியும் குழு ஒன்றை அமைத்து அறிக்கையை கோரியுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதிருப்பதை உறுதி செய்வதற்கு யோசனைகளை எவரும் முன்வைத்தால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும்
எனவும் தெரிவித்தார்.