மாதகல் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை, கடற்படை முகாமுக்கு சுவீகரிக்க எடுக்கும் முயற்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இன்று (01) மதியம் 1 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டம், சட்டத்தரணி கே சுகாஷ் தலைமையில் இடம்பெற்றது.  இதில் 20க்கும் மேற்பட்ட காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, தங்களுடைய காணியை சுவீகரிக்க தாங்கள் இடமளிக்கமாட்டோம் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

இன்றையதினம், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் காணி உரிமையாளர்கள் ஆளுநர் சந்திக்க உள்ளார் என்று அறிவுறுத்தப்பட்டு, கடிதம் அனுப்பபட்ட நிலையில், காணி உரிமையாளர்கள் வருகை தந்திருந்தனர்.

ஆனால், வேறு ஒரு கூட்டத்தில் ஆளுநர் கலந்துகொண்டதால், காணி உரிமையாளர்களை சந்திக்கும் கூட்டம் இடை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால், கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து அங்கு வந்த காணி உரிமையாளர்கள் தமது கோபங்களை வெளிப்படுத்தினர்.