வவுனியாவில் இருந்து வருகை தந்த இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயமான நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு ஏனையவர்களை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்த நிலையில் இரண்டாவது நபரின் சடலம் இன்று காலை தீர்த்தக்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மூன்றாவது நபரின் சடலம் சற்று முன்னர் அளம்பில் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடலிலிற்கு வந்து குளித்து கொண்டிருந்த மூவர் நேற்று மாலை திடீரென கடலில் மாயமாகியிருந்தனர்.

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடற்கரைக்கு வேனில் வந்த மூன்று இளைஞர்கள் கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென கடலில் மூழ்கியுள்ளனர்.

குறித்த மூவரையும் நீண்ட நேரமாக காணாத நிலையில் அவர்களுடன் கடலுக்கு சென்ற புதுக்குடியிருப்பை சேர்ந்த யுவதி முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

தேடுதலின் போது ஒருவருடைய சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏனைய இருவரையும் தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.

நேற்றைய தேடுதலின் போது ஒருவருடைய உடலம் மீட்கப்பட்ட நிலையில் மற்றுமொருவருடைய சடலம் இன்று காலை தீர்த்தக்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன் மூன்றாவது நபரின் உடலம் அளம்பில் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

மதவுவைத்த குளத்தை சேர்ந்த மனோகரன் தனுஷன் (வயது 27), சிவலிங்கம் சகிலன் (வயது26), தோணிக்கல் பகுதியை சேர்ந்த விஜயகுமாரன் தர்சன் (வயது 26) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.