ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, கிழக்கு மாகாண பெண்களால் ஒன்றிணைக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கவனயீர்ப்புப் பேரணி, இன்று (09) காலை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு – கல்லடி பாலத்திலிருந்து கல்லடி பாலத்திலிருந்து பறை, மேளம் முழங்களுடன் ஆரம்பமான இப்பேரணி, மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் வரையில் வருகைதந்ததுடன், அங்கு தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் அரசாங்கத்துக்கான மகஜர் வாசிக்கப்பட்டது.

சிறுபான்மையினருக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும் ஆயுதமாகவுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் கட்டாயமாக நீக்கப்படுவதுடன், அச்சட்டம் பாவிக்கப்படுதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் “வன்முறைகளற்ற வீடும் நாடும் எமக்கு வேண்டும்”, “பெண்களுக்கு பாரபட்சமான சட்டத்தை திருத்த வேண்டும்”, “நீதி கோரும் சகோதரிகளாக நாம் ஒன்றிணைவோம்” மற்றும் “வன்முறைகளற்ற ஒரு கௌரவமான சமூகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.