உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள், தேர்தல் கட்டமைப்பு மற்றும் விதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை அடையாளம் காண்பது தொடர்பில் இடம்பெற்ற பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.

எதிர்வரும் உள்ளளூராட்சி மன்ற தேர்தலுக்கு சுமார் 4 மாதங்களுக்கு முன்னரே தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியமெனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இதனடிப்படையில், மாற்றங்கள் இன்றி தற்போதைய சட்ட முறைமையின் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதாக இருந்தால், 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க நேரிடுமென அவர் கூறினார்.

அடுத்த பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.