ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின்
இணைய “சூம்” வழி மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் இன்று (12.12.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிவரையில் நடைபெற்றது.

இதன்போது கட்சியின் இன்றைய அரசியல் நிலைமைகள், எதிர்கால செயற்பாடுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், சிறுபான்மை இன கட்சிகளின் பிரதிநிதிகளின் கலந்துரையாடல் என்பன பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் எடுத்துக் கூறிய தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், சிறுபான்மை இன கட்சிகளின் சந்திப்பில் தமிழரசு கட்சி சார்பில் இரா. சம்பந்தன் அவர்கள் இன்று கலந்து கொள்வது ஒரு நல்ல விடயமாக பார்க்கப்படுகிறது என்றார்

அத்துடன் தற்போது கையில் இருக்கின்ற ஒரே விடயம் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் மட்டுமே. அதை அரசு இல்லாமல் செய்யப் பார்க்கின்றது. அதை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட, அரசு அதை இல்லாமல் செய்வதற்கு விடுவோமாக இருந்தால் பழையபடி பூஜ்ஜியத்திற்கு போய் விடுவோம். பிறகு இந்த விடயங்களை கையாள்வது மிக கடினமான இருக்கும்.

எங்களுக்கான தீர்வு ஒரு சமஷ்டி அமைப்பு தான். இருந்தாலும் இப்போது இருக்கும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துமாறு நாம் வலியுறுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து கட்சிக்கு இடைக்கால செயலாளரை நியமிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது அதற்கான கூட்டத்தை இணைய சூம் வழியிலா நேரிலே நடத்துவதா என்பது பற்றி ஆராயப்பட்டது.

பலரது வேண்டுகோளுக்கிணங்க இலகுவாக பலர் கலந்து கொள்ளக்கூடிய வகையில் செயலாளர் தெரிவுக்கான கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கேட்கப்பட்ட காரணத்தால் செயலாளர் தெரிவு பிற்போடப்பட்டதோடு அடுத்த கூட்டத்தில் தெரிவு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது