முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் விசாரணைகளின் போது சிறுமியின் தந்தையார் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் குறித்த சிறுமியின் தாய், தந்தை அவருடைய சகோதரி ஆகியோர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் மூவரையும் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பொலிசார், இவர்களை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில் விடயங்களை கேட்டறிந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி சரவணராஜா இவர்களை 48 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த வாரம் 13 ஆம் திகதி முதல் காணாமற் போயிருந்த நிதர்சனா, கொலை செய்யப்பட்ட நிலையில் 18 ஆம் திகதி சடலமாக அவரது வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் மீட்கப்பட்டிருந்தார்.
கடந்த 13 ஆம் திகதி தனது வீட்டிலிருந்து அக்காவின் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட நிதர்சனா, பின்னர் காணாமற்போனதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் 15 ம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். ஆனால் இக்கதைகள் அனைத்தும் உருவாக்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆரம்பத்தில் நிதர்சனா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது அக்காவின் கணவரை பொலிஸார் கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர். பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, சகோதரி ஆகியோரை வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர் .
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட தலைமை பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட குழு நடாத்திய விசாரணையின் பின்னர் சிறுமியின் தந்தை கொலை தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகளை ஒப்புதல் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.
தனது மகள் நிதர்சனா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் இதனை அறிந்த அவரது தாய் கருவை கலைக்கும் முயற்சியில் சிறுமியை மயக்கமடைய செய்யும் நோக்கில், ஏதோவொரு மருந்தை வழங்கியதாகவும் அவரது தந்தையின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்படி, குறித்த சிறுமியின் கருவினை கலைக்கும் முயற்சியின்போது அவர் உயிரிழந்திருக்கலாம் என்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்திருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு நேற்றைய தினம் தடயவியல் பொலிசார், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஜ். சமுத்திரஜீவ மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமரசிங்ே, முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி, இராணுவத்தினர் போன்ற பலரும் நேரடியாக சென்று சம்பவ இடத்தில் இருந்த பழைய கிணற்றினை பார்வையிட்டதோடு நீண்ட நேரம் நீரில் ஊறிய அடையாளங்கள் நிதர்சனாவின் உடலில் காணப்பட்டதால், குறித்த கிணற்றின் நீரை இறைத்து பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், சிறுமியின் வீட்டிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், சிறுமியின் வீட்டில் இரத்த கறைபடிந்திருந்த மேசையினை சான்றுப்பொருளாக மன்றில் சமர்ப்பிக்குமாறு இதன்போது பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.