கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிக்கும் பயணிகளுக்காக சகல வசதிகளுடன் கூடிய சொகுசு ரயில் சேவை இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ரயில் தினமும் காலை 5.10 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 12.17 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு கல்கிசை சென்றடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட இந்த ரயிலில் 10 பெட்டிகள் மற்றும் 02 பவர் என்ஜின்கள் உள்ளன.

இந்த ரயிலில் பயணிகளுக்கு வசதியான இருக்கைகள், உணவருந்துவதற்கான பகுதி, டிவி சேவை மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன.

இந்த ரயிலின் சேவையைப் பெற விரும்பும் பயணிகள், ஒரு மாதத்திற்கு முன்பே ஒன்லைனில் இ-டிக்கெட்டுகளை வாங்க முடியும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட இந்த ரயிலின் பெறுமதி 2500 மில்லியன் ரூபாயாகும்.

இந்த ரயில் சேவையின் ஆரம்ப சேவை போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் கல்கிசை ரயில் நிலையத்தில் இடம்பெற்றது.

பின்னர் அமைச்சர் கல்கிசை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரை ரயிலில் பயணித்தார்.

கல்கிசை, தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கோட்டை, பொல்கஹாவெல, குருநாகல், அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, கொடிகாமம், யாழ்ப்பாணம், கோண்டாவில், சுன்னாகம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய ரயில் நிலையங்களில் குறித்த ரயில் நிறுத்தப்படும்.

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு 1700 ரூபாயும், கல்கிசையிலிருந்து வவுனியாவிற்கு 1500 ரூபாயும், கல்கிசையிலிருந்து அனுராதபுரத்திற்கு 1200 ரூபாயும் அறவிடப்படுகின்றன.