உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தமது வாழ்க்கைத் துணையை இழந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து. முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விசாரணைகளை தாமதிக்காமல் முன்னெடுக்குமாறும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

தாக்குதலை தவிர்ப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, தீவிரவாதிகளுக்கு எதிராக கனிவான நிலைப்பாட்டை பிரதமர் கொண்டிருந்தார் என அந்த ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சில பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எனவே தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழியேற்படுத்த வேண்டும் என நாம் கோருகின்றோம்.

தற்கொலை செய்து கொண்ட நபர், தமக்கு நீதி கிடைக்காததன் காரணமாக கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி, தமது பிள்ளைகளையும் தனித்துவிட்டு அவ்வாறானதொரு முடிவை மேற்கொண்டுள்ளதாக பேராயர் மேலும் குறிப்பிட்டார்.