மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கஜுவத்தை கடலில் வெள்ளிக்கிழமை (14) நீரில் மூழ்கி காணமல் போன இரு சிறுவர்களும் நேற்று (15) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு – கிரான் பகுதியைச் சேர்ந்த ஏழு சிறுவர்கள் குறித்த கடலில் தை பொங்கல் தினாமான 14 ஆம் திகதி நீராடிக் கொண்டிருந்த போதே இருவர் கடலில் மூழ்கியுள்ளனர்.

இவ்வாறு, நீராடிய ஒருவர் காப்பாற்றப்பட்டதுடன், இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போன இரு சிறுவர்களையும் தேடும் பணிகள் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை தீவிரமாக இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று (15) பிற்பகல் 2.30 மணியளவில் கிரான் பகுதியை சேர்ந்த ச.அக்சயன் (வயது 16) எனும் சிறுவனும், அன்றைய தினம் மாலை 6.30 மணியளவில் கிரான் பிரதான வீதியைச் சேர்ந்த ஜீவானந்தா சுஜானந்தன் (வயது 16) எனும் சிறுவனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் மூழ்கி மரணமடைந்த இரு சிறுவர்களின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.