அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தமக்கு எதிராக முன்வைத்த பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன, ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள், அவன்கார்ட் நிறுவனம், அந்த நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாப்பா சேனாதிபதி மற்றும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜானக பண்டார உள்ளிட்டோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். .

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு 2020 ஜூன் 16 ஆம் திகதி தனக்கு அழைப்பு கிடைத்ததாக மனுதாரர் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தான் அழைக்கப்பட்டதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் செய்த முறைப்பாட்டினை விசாரிக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டிய அவர், கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் மற்றும் நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் இந்த முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.

எனவே இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு குறித்த ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தமக்கு எதிராக 2020 நவம்பர் 24ஆம் திகதி சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் சட்டவிரோதமானவை எனவும் சட்ட அடிப்படையற்றவை எனவும் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், அவற்றை வலுவிழக்கச் செய்யும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை கோரியுள்ளார்.