கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து செயற்படுத்த சுகாதாரத்துறையின் பிரதானிகள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கையின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

டிசெம்பர் மாத இறுதியில் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கை இன்று வரை (31)  நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

திருத்தங்களுக்கு உட்பட்டு (சிறப்பு காரணங்களுக்கு மட்டும்) இந்த சுற்றறிக்கை பெப்ரவரி 28ஆம் திகதி வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த முறை வெளியான சுகாதார வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள்,

திருமண நிகழ்வுகளின் போது மண்டபத்தின் வழமையான கொள்ளளவில் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், மதுபானம் வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் மொத்த நபர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்களுக்கு இணங்காத நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக தற்போதுள்ள சட்ட விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உணவகங்களில் உணவருந்துவோர், கடைகள், அங்காடிகள், மருந்தகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில் அவற்றின் கொள்ளளவில் 50% பேர் அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரையரங்குகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் அதன் கொள்ளளவில் 75 சதவீதம் பேர் அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.