உள்நாட்டுப் பொறிமுறை மூலம்  நடந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாடாகக் காணப்படுகின்றது என வெளி விவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

வடக்கில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் வெளி விவகார அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல்,   யாழ். மாவட்டச் செயலாளர் தலைமையில், மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (31) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் பிரதித் தலைவருமான அங்கஜன் ராமநாதனும் கலந்துகொண்டிருந்தானர்.

இதன்போது ஜெனிவா கூட்டத் தொடரில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்  பதிலளித்த போதே, வெளி விவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, அதிகப் பிரச்சினைகள் உள்ள நாடாக இலங்கை இல்லை. அத்தோடு, ஏற்கெனவே நடந்த பிரச்சினைக்காக  நேரத்தையும் வீணடிக்கத் தேவையில்லை.

“தற்போது  கொரோனா வைரஸுக்கு நாம் முகம் கொடுப்பதால், பல மில்லியன் கணக்கில் பணத்தை செலவழித்துள்ளோம். அதாவது, தடுப்பூசி மற்றும் ஏனைய சுகாதார செயற்பாடுகளை முன்னெடுத்து, எமது நாட்டை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்கான முயற்சியில்  ஈடுபட்டுள்ளோம். கொரோனா நிலைமை தொடர்பிலேயே தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றோம்.

“தேசிய ஒற்றுமை ஒருமைப்பாடு என்பவற்றை நிலைநாட்டி, உள்நாட்டு பொறிமுறை ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் தீர்வு வழங்குவதை எதிர்பார்க்கின்றோம். இந்த விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் உறுதியாகவுள்ளார். அதனை செயற்படுத்த பல்வேறுபட்ட முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.

 “தற்போதுள்ள அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கூட மாற்றங்களை செய்துள்ளது. 2015-2019 வரை இருந்த அரசாங்கத்தில் கூட இந்தப் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றுமாறு கூட யாரும் கூறவில்லை, மாற்றியமைக்கப்படவுமில்லை.

“எனவே 42 வருடங்களின் பின்னர் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஒரு முன்னேற்றகரமான ஒரு நிலை இருக்கின்ற போது,  ஐ.நா சபையின் ஜெனிவா கூட்டத்தில் இந்த விடயங்களை எடுத்துரைக்க உள்ளோம்” என்றார்.