பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி கடந்த திங்கட்கிழமை முதல் சுப்பர் மடம் பகுதியில் மீனவர்கள் வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்நிலையில் இன்று பருத்தித்துறை பொலிஸார், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், மீனவர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி விண்ணப்பம் செய்திருந்தனர்.

வீதியை மறித்து மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுப்பதனால் வீதி ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது , பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் , கொரோனா அபாயம் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தடை கோரி இருந்தனர்.

அதனை அடுத்து மீனவர்களின் போராட்டத்திற்கு நீதிமன்று தடை விதித்து கட்டளை பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற கட்டளையின் பிரகாரம், வீதி மறியலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். அதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பொலிஸ் விசேட அதிரடி படையினரும் போராட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.