தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபரும், செயலதிபருமான அமரர் தோழர் முகுந்தன் (கதிர்காமர் உமாமகேஸ்வரன்) அவர்களின் 77ஆவது ஜனனதின நிகழ்வு இன்று எமது கட்சியின் குடியேற்றக் கிராமமான வவுனியா திருநாவற்குளத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு கழகத்தின் பிரான்ஸ் கிளைத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் அனுசரணையில் கழகத்தின் மத்திய குழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான ஆசிரியர் சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சந்திரேஸ்வரன்(ரவி), பட்டைகாடு இராமர் ஆலயத் தலைவர் மயூரன், ஆற்றலரசி குழுமத் தலைவி லூசியா, சிறுவர் பிரிவு கிராம இணைப்பாளர்கள் கலிஸ்ரா, வினோபா, சுசீலா, நந்தா மற்றும் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் அஞ்சலி உரையாற்றினார். இதன்போது நினைவுப் பகிர்வுகளும் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து சிறுவர் மேம்பாட்டுக் கழகத்தினால் தெரிவு செய்யப்பட்ட திருநாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த 70 பாடசாலை பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.