சர்வதேச தாய்மொழி தினம் இன்று (21) ஆகும்.

அன்றைய பாகிஸ்தானில் 1952ல் டாக்கா பல்கலைக்கழகத்தில் (இன்று வங்கதேசத்தில் உள்ளது) வங்க மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது நடந்த கலவரத்தில் நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர் அவர்களின் நினைவாக யுனெஸ்கோ பெப்ரவரி 21ஐ சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்தது.

பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாடு, கலாசாரம் என்பனவற்றின் தனித்தன்மையை பேணிப் பாதுகாக்கும் நோக்கிலான கவசமாக இன்றைய நாள் கொண்டாடப்படுகின்றது.

தமிழ்மொழி உலகில் தோன்றிய மொழிகளுள் மிகப் பழமையான மொழியாக மொழி ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

தமிழ்மொழி ஏனைய மொழிகளைவிட மிகநீண்ட இலக்கண இலக்கிய மரபுகளை உடையது. அதனாலே தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் அழியா சிறப்பைப் பெற்ற எம் தாய்மொழி தமிழை வளர்க்க அயராது உழைத்த அத்தனை ஆன்றோர்களும் சான்றோர்களும் இன்றைய நாளில் நினைவுகூரத்தக்கவர்களே!….

இந்த அனைத்துலகத் தாய்மொழி நாளில் தமிழர்களாகிய நாம் நமது தாய்மொழியாம் தமிழ்மொழியை நினைந்துப் போற்றி, நம்முடைய தாய்மொழிக் கடமைகளை நிறைவாகச் செய்ய உறுதிகொள்ள வேண்டும்.

உலக இனங்கள் எல்லாம் தம்முடைய தாய்மொழியையும் பண்பாட்டு விழுமியங்களையும் மீட்டுக்கொள்ளவும் காத்துக்கொள்ளவும் முனைந்து செயல்படுவதை உணர்ந்துபார்த்து நாமும் அவ்வண்ணமே செயல்பட வேண்டும். இல்லையேல், அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு.. அல்லது அடுத்த நூற்றாண்டில் நமது தமிழ்மொழியானது வரலாற்றில் மட்டுமே வாழும் மொழியாக மாறிப் போய்விடலாம்; அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மொழியாக ஆகிப்போய்விடலாம்.

தமிழ்மொழி ஆளும் மொழியாக இருந்த நூற்றாண்டுகளை வரலாற்றில் கண்டிருக்கிறோம்;. தமிழ் மக்களிடையே புழங்கும் மொழியாக இருப்பதைக் கண்டிருக்கிறோம்;. புலம்பெயர்ந்து பரவிய மொழியாகக் கண்டிருக்கிறோம்;. பன்மொழிகட்கும் சொற்கடன் கொடுத்த மொழியாகக் கண்டிருக்கிறோம்..

இப்படியாகக் கடந்த நூற்றாண்டுகளைக் கடந்து வந்துவிட்ட தமிழ்மொழி இனிவரும் காலத்திலும் வாழும் மொழியாக தமிழ்மக்கள் வழக்கில்.. தமிழ்மக்கள் வீட்டில்.. தமிழ்மக்கள் நாவில் வாழ வேண்டும்.

அதற்குப் பின்வருவனவற்றில் சிலவற்றையேனும் நாம் உடனடியாகச் செய்தாக வேண்டும்:-

1.குழந்தைக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுவோம்.
2.குழந்தைகளுக்குத் தமிழ்க்கல்வி கற்றுக்கொடுப்போம்.
3.குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம்.
4.இல்லங்களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவோம்.
5.இல்ல நிகழ்ச்சிகளைத் தமிழில் நடத்திக் கொள்வோம்.
6.தமிழரிடம் தமிழில் பேசுவோம்.
7.தமிழ்ப் பண்பாட்டைப் பேணுவோம்.
8.தமிழினம் என்ற இன அடையாளத்தை மீட்டமைப்போம்.
9.தமிழ் இனத்தின் பெயரால் ஒன்றுபட்டு நிற்போம்.
10.நாம் தமிழர் என்று மார்தட்டி முழங்குவோம்.
11.தமிழனுக்குத் தமிழன் கைகொடுத்து உதவிடுவோம்.
12.தமிழிய நெறியில் குடும்பத்தை வழிநடத்துவோம்.
13.தமிழால் பூசித்து இறைமையை வழிபடுவோம்.
14.தமிழ் மொழி, இன, பண்பாட்டு, வரலாற்று அறிவு பெறுவோம்.
15.தமிழே மூச்சு, தமிழே உயிர், தமிழே வாழ்வு என வாழ முற்படுவோம்.
நன்றி…