வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகங்களில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கு வழங்கப்படும் 6,000 ரூபா கொடுப்பனவை அதிகரிக்க கோரியும், தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும், நீண்ட காலமாக தாம் குறைந்த சம்பளத்துடன் சேவையாற்று வருவதாகவும், தமக்கு இந்த அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வருகை தந்து தமது ஆதரவினை தெரிவித்து உள்ளனர்

பிந்தைய செய்தி

சம்பள அதிகரிப்பு கோரி வவுனியாவில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததுடன், வடக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

வவுனியா, பூங்கா வீதியில் உள்ள ஆளுநரின் பிராந்திய அலுவலகம் முன்பாக இன்று காலை குறித்த கவனயீர்ப்புப்  போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது, “முன்பள்ளி கலைத்திட்டத்தை மட்டும் மாற்றுவதால் என்ன பயன்?”, “இன்றைய விலை வாசியில் 6000 ரூபா போதுமனதா?”, “உழைப்புக்கான ஊதியமும் கௌரவமும் வழங்கப்பட வேண்டும்”, “கல்விப் பயணத்தின் முதற்படியான ஆசிரியர்களை முழுமையாக்குங்கள” என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

“முன்பள்ளி ஆசிரியர்களாகப் பல வருடங்களாக நாம் பணியாற்றுகின்றபோதும், உதவித் தொகையான வெறும் 6000 ரூபா மட்டுமே எமக்குக் கிடைக்கின்றது. தற்போதைய பொருட்களின் விலையேற்றத்துக்கு மத்தியில் இந்த 6000 ரூபா பணத்தை வைத்து நாம் எவ்வாறு குடும்ப சீவியத்தைக் கொண்டு நடத்த முடியும்? பெண் தலைமைத்துவக்  குடும்பங்கள், போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் எனப் பலரும் சேவை நோக்கத்தோடு பணியாற்றி வருகின்றோம். எனினும், எம்மால் தொடர்ந்தும் அவ்வாறு செயற்பட முடியாது. எமது குடும்பங்கள் பட்டினியால் இறக்கும் நிலை வரும். எனவே, எமக்கான சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு நாம் இந்த அரசிடம் கோருகின்றோம். ஒவ்வொரு அரசியல்வாதிகளும் வாக்குறுதிகளை மட்டுமே தருகின்றார்கள். எமக்குத் தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை” எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, முன்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பான மகஜரைப் பெற்றுக் கொண்டதுடன், ஒரு வாரத்துக்குள் தீர்க்கமான முடிவைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். இதையடுத்துப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.