ஊடகவியலாளர் மெலிசியா குணசேகரவின் கொலை தொடர்பில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபடும் அன்டனி ரம்சன் ஜோர்ஜ் என்பவருக்கே மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பத் அபேகோன் மற்றும் பீ. குமாரன் ரத்னம் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இந்த தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி பத்தரமுல்லை, சுபுத்திபுர பகுதியில், ஊடகவியலாளரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கூரிய ஆயுதத்தால் தாக்கி அவரை கொலை செய்தமை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அருளானந்தம் அன்டனி ரம்சன் ஜோர்ஜ் எனப்படும் பிரதிவாதிக்கு எதிராக சட்ட மா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீண்டகால வழக்கு விசாரணையின் பின்னர், பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குற்றவாளிக்கு 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் திகதி சிறைத்தண்டனையுடன் கூடிய மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மரண தண்டனையில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, பிரதிவாதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முறையான நடைமுறையை பின்பற்றியே தண்டனையை அறிவித்ததாக தீர்மானித்து, பிரதிவாதியின் மேன்முறையீட்டை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.