ஒற்றுமை விடயத்தில் தமிழரசு கட்சி எதிர்மறையாக செயற்படுகிறது –

(ரொஷான் நாகலிங்கம்)

அண்மையில் இணைந்த தமிழ் கட்சிகளின் கூட்டு தேர்தல் நோக்கத்துக்காக உருவான ஒரு கூட்டணி அல்ல. ஆனால் அந்த ஒற்றுமையைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதை செய்வதற்காக அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். ஒன்றாக இயங்குவது தமிழருக்கு ஒரு நல்ல விடயமாகத்தான் அமையும் என நான் நினைக்கின்றேன் என தெரிவித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், கூடியளவிற்கு அனைவரையும் ஒற்றுமையாக அழைத்துச் செல்வதிலேயே கூடிய கவனம் செலுத்த வேண்டும். ஆனால் தமிழரசுக்கட்சி அதற்கு எதிர்மறையாக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

தமிழ் கட்சிகளின் ஒருக்கிணைந்த வேலைத்திட்டம் குறித்து உங்கள் பார்வை என்ன? இதிலிருந்து மலையக, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் வெறியேறியது பின்னடைவா?

மலையக முஸ்லிம் கட்சிகள் வெளியேறியமை ஒரு பின்னடைவாகவே நான் பார்க்கின்றேன். இருந்தாலும் அவர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானார்கள். ரவூப் ஹக்கிமை பொறுத்தவரை ஆரம்பத்தில திண்னைக் கூட்டத்துக்கு வந்திருந்தார். அதே போல மனோ கனேசனும் வந்திருந்தார்கள். இருவரும் மிக ஆர்வத்துடனேயே இருந்தார்கள். முக்கியமாக ரவூப் ஹக்கிமுக்கு சம்பந்தன் அண்ணரையும் இதில் இணைத்துக் கொள்வதில் ஆர்வம் இருந்தது. அதே போல அங்கு வந்திருந்த அனைவருக்கும் இந்த ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக கொழும்பில் நடந்த கூட்டத்துக்கு வரும்படி நானும் செல்வம் அடைக்கலநாதனும் கேட்டிருந்தோம்.
அதே போல ரவூப் ஹக்கிமும் மனோ கணேசனும் அவரை கேட்டிருந்தார்கள். எமது அழைப்பை ஏற்று அவர் அங்கு வந்திருந்தார். ஙவரும்போது அவர் ஒரு வரைபை கொண்டு வந்திருந்தார். நாங்களும் திண்ணை கூட்டத்தில் வரைந்த வரைபை கொண்டு போயிருந்தோம். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த வரைபை தான் கொடுக்க வேண்டும் என்றார்கள். நாங்கள் இரண்டு வரைபையும் சேர்த்து புதிதாக ஒரு வரைபை வரைந்து சமர்ப்பிக்கலாம் என்று கூற எல்லோரும் ஏற்றுக்கொண்டு புதிதாக வரைபு வரையப்பட்டது. வரைந்து எடுத்த பின்பு சில குழப்பங்கள் நீடித்து கொண்டிருந்தது. ரவூப் ஹக்கிமை பொறுத்த வரைக்கும் அவரது கட்சிக்குள் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதில் இல்லாது பழைய 13 ஆம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை காணப்பட்டது.
ஏனெனில் அதில் காணப்பட்ட வடக்கு, கிழக்கு இணைப்பு காணப்படுகின்றமை. மனோ கணேசனைப் பொறுத்தமட்டில் அவரது கூட்டணியில் இருக்கக்கூடிய திகாம்பரம் மற்றும் இராதாகிருஸ்ணனுக்கு யாரோ என்று சொல்லுவதைக்காட்டிலும் தமிழரசு கட்சியை சேர்ந்த ஓரு சிலர், நீங்கள் இதனை ஏற்றுக் கொண்டால் அந்த வரைபில் அவர்கள் சுயநிர்ணயம் கேட்கின்றார்கள், சமஷ்டி பற்றி கதைக்கின்றார்கள். இதனை ஏற்றால் உங்களுக்கு பிரச்சனை வரும். இதில் கையெழுத்து இடுவது புத்திசாலித்தனம் இல்லை என வலியுறுத்தினார்கள். இதனால் அவர்களும் தயங்கினார்கள். இதனால் அவர்கள் கையெழுத்திடவில்லை. நாங்கள் கூறினோம்; நீங்கள் கையெழுத்திடாவிட்டாலும் வெளியில் இருந்து எம்மோடு பயணியுங்கள் என. அவர்களும் அதனுடன் ஒத்து பயணித்தார்கள்.

இதனிடையே மனோ கணேசனால் அந்த வரைபில் முன்மொழியப்பட்ட மலையகத் தமிழர்கள் சம்பந்தமான விடயத்தை எடுக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி கேட்டுக் கொண்டதாக சம்பந்தன் அண்ணர் செல்வம் அடைக்கலநாதனிடம் சென்னார். ஏன் எனில் மனோ இதில் இல்லை என்பதால். நாங்கள் கூறினோம், இது தவறு அல்ல. தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டதே மலையக தமிழருக்கான குடியுரிமைப் பிரச்சினைக்காக. அதேபோல திம்புவில் கூட மலையக தமிழர்களின் குடியுரிமை தொடர்பாக நாங்கள் கதைத்திருந்தோம். அவர் அதை ஏற்றுக் கொண்டார்.அதன் பிறகு அப்பிரேரணை கையளிக்கப்பட்டது.

தமிழ்க் கட்சிகளின் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தில் ஒன்றுபட்டுள்ள கட்சிகள் எதிர்வரும் தோ்தல்களிலும் பொது வேலைத்திட்டங்களிலும் ஒன்றுபடும் சாத்தியம் உள்ளதா? குறிப்பாக கூட்டமைப்பிலிருந்து வெளியேறியோர் மீள ஒன்றுபடும் சாத்தியம் உண்டா?

கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத எந்த கட்சிகளும் இந்த வேலைத்திட்டத்தில் பங்குபற்றவில்லை. அவ்வாறு சாத்தியப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஆனால் தமிழரசுக் கட்சியில் ஒரு தீர்மானம் அண்மையில் மத்திய குழுவில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுடன் மாத்திரம் தான் செயற்படுவதாக தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் தான் 16ஆம் திகதி நடைபெற்ற பகிரங்க கருத்தரங்கிலும் அவர்கள் பங்குபற்றவில்லை. ஆகவே அவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. அத்துடன் இது தேர்தல் நோக்கத்துக்காக உருவான ஒரு கூட்டனி அல்ல. ஆனால் அந்த ஒற்றுமையைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். அதை செய்வதற்காக அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். அதே நேரம் தமிழரசு கட்சியுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும். ஏன் அவர்கள் அதை மறுக்கின்றார்கள் என்பது தெரியவில்லை. அவர்களுக்கான வாய்ப்புக்கள் குறையும் என்பதற்காகவா என்பது தெரியவில்லை. ஒன்றாக இயங்குவது தமிழருக்கு ஒரு நல்ல விடயமாகத்தான் அமையும் என நான் நினைக்கின்றேன்.

தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைவை தமிழர் தரப்பில் வெளியே இருந்து விமர்சிப்போர் குறித்த உங்கள் பார்வை என்ன?

காலகாலமாக நடக்கின்ற ஒரு விடயம் தான் இந்த விமர்சனம். தமிழர் விடுதலைக் கூட்டணி உருவானபோது கூட காணப்பட்டது. அது பெரிதாக காணப்படவில்லை. அதன் பிற்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவான போது பெரிதாக விமர்சிக்கப்படவில்லை. ஏனெனில் அது புலிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்ற படியால் அதை விமர்சிப்பதற்கு எவரும் துணியவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு விமர்சனங்கள் தொடங்கியுள்ளன. இப்போதும் பல விமர்சனங்கள் குறிப்பாக இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக மிகப்பெரிய விமர்சனங்களை கஜேந்திரகுமார் அணியினர் முன் வைத்து வருகின்றார். அது எவ்வளவு தூரம் மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது என்பது எனக்கு கேள்விக்கூறியாகவேயுள்ளது. மக்கள் அதனை ஒரு விடயமாகவே பார்க்கவில்லை. அவர்கள் வழக்கமாகவே இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்துபவர்கள். எனவே நீங்கள் ஒற்றுமையாக போங்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். விமர்சனங்கள் கட்டாயமாக இருக்கும். அதில் பிரச்சினை இல்லை. நாங்களும் போட்டிக்கு விமர்சனங்களைச் செய்யாமல் கூடியளவிற்கு அனைவரையும் ஒற்றுமையாக அழைத்துச் செல்வதிலேயே கூடிய கவனம் செலுத்த வேண்டும். ஆனால் தமிழரசுக்கட்சி அதற்கு எதிர்மறையாக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வோண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தனக்குச் சார்பான நிலைப்பாட்டை வலியுறுத்தி பேரவை உறுப்பு நாடுகள் மத்தியில் இலங்கை தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது? தமிழர் தரப்பிலிருந்து இவ்வாறான தீவிர செயற்பாடுகளை காணமுடியவில்லையே?

சம்பந்தன் கடிதம் அனுப்பியுள்ளார். கொரோனா காரணமாக எங்களுக்கு அங்கு சென்று செயற்படுவது மிகவும் கடினமான விடயமாகவுள்ளது. இருந்தாலும் நாங்கள் அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம். குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் இதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்கள் எங்களுடைய கட்சிகளுடன் தொடர்புகளை வைத்து இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். தனியே சம்பந்தன் அண்ணர் கடிதம் மாத்திரம் அல்ல மற்றைய கட்சிகளும் கடிதங்களை அனுப்புவதனுடாக அவர்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்பது தான் எமது நிலைப்பாடு. ஆனால் இம்முறை ஆணையாளர் ஒரு அறிக்கையைத் தான் சமர்ப்பிக்க போகின்றார். செப்டம்பரிலே வரும் அமர்வில் தான் புதிய தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கின்றது. அதில் மிகவும் இறுக்கமான ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம். அதற்கான செயற்பாடுகளை இப்போதில் இருந்து செயற்பட வேண்டும்.

பாரிய மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் எந்தவொரு குறைபாடுகளையும் அகற்றும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உங்கள் தரப்பிலிருந்து ஆரம்பம் முதலே முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் இதில் சீர்திருத்தங்கள் இடம்பெறும் என நீங்கள் கருதுகிறீர்களா?

அப்படியான திருத்தங்கள் வரும் என நான் நம்பவில்லை. ஆனால் இப்படியாக நாம் மாற்றுகின்றோம் என்று அவர்கள் கருத்துரைப்பது சர்வதேச அழுத்தங்களினால். முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமை கழகத்தினுடைய தீர்மானம் மற்றும் மற்றைய நாடுகளினுடைய அழுத்தங்கள் என்பதன் காரணமாகத் தான். ஆகவே நாங்கள் தொடர்ந்தும் அவர்களூடாக அழுத்தங்களை கொடுப்பதன் மூலம் இதை ஒரு சர்வதேச சட்டங்கள் ஒழுங்குகளுக்கு அமைய இந்த பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றப்பட வேண்டும் என்பதை தொடர்ந்தும் வலியுறுத்திக்கொண்டு வருவோம். இந்த மாற்றங்கள் உண்மையிலையே மாற்றங்கள் இல்லை. இதனை கடுமையாக எதிர்க்கின்றோம்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தோ்தல்கள் குறித்த பேச்சுக்கள் எழுந்துள்ளன. இவற்றை எதிர்கொள்வது குறித்த தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

இது சம்பந்தமாக காத்திரமான பேச்சுகள் நடக்கவில்லை. என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம், அடுத்த வருட ஆரம்பத்தில் தான் தேர்தல் நடைபெறும் என நினைக்கின்றேன். அரசு 40 மில்லியன் ரூபாவை வட்டாரத்துக்கு என ஒதுக்கி அந்த காசை தங்களுடைய உறுப்பினர்கள் அல்லது தங்களுடைய அமைப்பாளர்களூடாகத்தான் செயற்படுத்தவுள்ளார்கள். இதன் மூலம் தங்களைப் பலப்படுத்திய பிற்பாடு அடுத்த தேர்தலுக்கு போகலாம் என்று எண்ணுகின்றார்கள். என்ன தான் செய்தாலும் அரசுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்பது தான் எனது அபிப்பிராயம்.
(யாழ் தினக்குரல் 27.02.2022)