அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உட்பட அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகளின் 16 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்க தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (04) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த பத்து கட்சிகளின் தலைவர்களும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, விமல் வீரவன்சவின் கட்சியைச் சேர்ந்த 6 பேர், உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்காரவின் கட்சியைச் சேர்ந்த இருவர், அத்துரலியே ரத்தின தேரர், டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க, ஏ.எல்.எம்.அதாஉல்லா உள்ளிட்ட 16 பேர் சுயாதீனமாக இயங்கவுள்ளனர்.

 அத்துடன், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும், விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட கூட்டறிக்கையை வெளியிடுவதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அறியமுடிகிறது.