இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தை தாம் அங்கீகரிப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கூட்டு பலாத்காரத்தின் விளைவாக உருவாகும் கர்ப்பத்தை கலைப்பதை சில நாடுகள்  ஏற்கனவே சட்டப்பூர்வமாக்கியுள்ளன எனவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

கூட்டு வன்புணர்வுக்கு உள்ளான சிறுமிகளின் வயிற்றில் வளரும் சிசுவை அகற்றும் நடைமுறை இல்லாத காரணத்தினால் சிலர் தற்கொலை செய்து கொண்ட சந்தர்ப்பங்கள் உள்ளதாக சாந்த பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் கருக்கலைப்புக்கான சட்ட ஏற்பாடுகளை வழங்குவது முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான சிறுமிகளுக்கு சில நிபந்தனைகளின் கீழ் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டத்தை கொண்டு வருவதற்கான முன்மொழிவுகளை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக அலி சப்ரி கூறினார்.