நேட்டோ அமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் திகதியில் இருந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் உக்ரேனும்  தம்மை தற்காத்துக் கொள்ள ரஷ்ய படைகள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதனால் அங்கு அதிக அளவில் உயிரிழப்புக்களும்,பொருட்சேதங்களும் ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர்  செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிவிப்பில்  நேட்டோ நாடுகள் அமைப்பில் சேரவேண்டும் என்று உக்ரேன் விரும்பியது. ஆனால் நேட்டோ, அதனை விரும்பவில்லை என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டோம்.

எனவே நேட்டோ அமைப்பில் எங்களை உறுப்பினராக சேர்த்து கொள்ளுங்கள் என்ற எங்களின் கோரிக்கைக்கு இனியும் அழுத்தம் கொடுக்க போவதில்லை. இனி நேட்டோ நாடுகள் அமைப்பில் சேரவிரும்ப வில்லை.

மண்டியிட்டு எதையாவது தானமாக பெறும் நாட்டின் ஜனாதிபதியாக இருக்க நான் விரும்பவில்லை. ரஷ்ய ஜனாதிபதி  புடின் , உக்ரேனில் உள்ள 2 பிரிவினைவாத குழுக்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கி உள்ளார்.

அந்த குழுக்கள் தொடர்ந்து எங்களுடன் போரிட்டு வருகிறார்கள். அங்கு வசிக்கும் மக்கள் உக்ரேனின் பகுதியாக வாழவே ஆசைப்படுகிறார்கள்.

ரஷ்யாவை தவிர வேறுயாரும் இக்குழுக்களை அங்கீகரிக்கவில்லை. அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு குறித்த உத்தரவாதம் வேண்டும். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரேன் தயாராக உள்ளது.

பேச்சுவார்த்தை மூலம் இப் பிரச்சினைக்குத் தீர்வு காண ரஷ்ய ஜனாதிபதி புடின் முன்வரவேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது அறிவிப்பானது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.