உக்ரைனில் இருந்து வெளியேற முடியாது என 27 இலங்கையர்கள் தெரியப்படுத்தியுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத்  தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

15 மாணவர்கள் உட்பட உக்ரைனில் 81 இலங்கையர்கள் இருந்தனர். மாணவர்கள் தவிர அங்கு வசித்த 66 இலங்கையர்களில் 39 பேர் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர். போலந்து, ருமேனியா, ஜேர்மன் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். அதற்கான அனைத்து வசதிகளையும் எமது தூதரகம் செய்து கொடுத்துள்ளது.

தற்போது உக்ரைனில் 27 இலங்கையர்கள்தான் இருக்கின்றனர். அவர்கள் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாது எனத் தூதரகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். அவர்களில் சிலர் தொழில் செய்கின்றனர். மேலும், சிலர் குடும்பமாக வாழ்கின்றனர் – என்றார்.