இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா பயணமான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். இந்தியப் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று (16) மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

அயல் நாடான இலங்கைக்குத் தேவையான சகல விதமான உதவிகளையும் எந்தர்ச் சந்தர்ப்பத்திலும் வழங்குவதற்குத் தயார் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததுடன் இலங்கைக்காக எப்பொழுதும் முன்னிட்போம் என்றும் இதன் போது குறிப்பிட்டார்.

இலங்கையின் விவசாயம், மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளம், டிஜிற்றல் மயப்படுத்தல், சுற்றுலா, கடற்றொழில் உள்ளிட்ட துறைகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒத்துழைப்பை வழங்குவதற்கும் இந்தியா உடன்பாடு தெரிவித்தது.

இலங்கைக்கு இந்தியா வழங்கியிருக்கும் ஒத்துழைப்புகளுக்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியப் பிரதமரிடம் நன்றி தெரிவித்தார்.

இந்திய – இலங்கை கடற்றொழில் பிரச்சினைகள் பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.