மிரிஹானவில் நேற்று (31) இடம்பெற்ற கலவரம் தொடர்பான விசாரணைகள் மூன்று விசேட குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மிரிஹான, பெகிரிவத்த மாவத்தைக்கு அருகில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தை மறித்து நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கலவரம் வெடித்தது.

இதன்போது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டம் மற்றும் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர்,

“கொழும்பு குற்றப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் மேற்கு வடக்கு குற்றப்பிரிவு ஆகிய மூன்று குழுக்களால் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”

“பொதுச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.”

“ஊடகவியலாளர்கள் இது குறித்து செய்தி வெளியிடுவதைத் தடுக்க முடியாது. இது மக்களின் உரிமை. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.”

இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் 39 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 18 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

“கைது செய்யப்பட்டவர்களில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த 42 பேரும், மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 3 பேரும், சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த 4 பேரும், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் தென் மாகாணத்தைச் சேர்ந்த இருவர் அடங்குகின்றனர்.” “இந்தச் சம்பவத்தின் போது ஜனாதிபதி எங்கிருந்தார் என்று கூற எனக்கு அதிகாரம் இல்லை.” “இது போன்ற உண்மைகளை வெளிப்படுத்த முடியாது.” “இந்த சம்பவத்தில் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் இல்லை. விசாரணைகள் நடந்து வருகின்றன.”  “எதிர்வரும் 3ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பது குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.”