யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் , பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண் பணம் கொடுக்கலில் ஈடுபட்டு வருபவர் எனவும், குடும்பம் ஒன்றுக்கு கொடுத்த 3 இலட்ச ரூபாய் பணத்தை வாங்க சென்ற போதே காணாமல் போயிருந்தார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில், மணியந்தோட்டம் பகுதியில் குறித்த பெண்ணிடம் பணம் வாங்கிய குடும்பத்தினரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி இருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில், பணம் வாங்கிய குடும்பத்தினர் அப்பெண்ணை கொலை செய்து அவர்களது வீட்டுக்கு பின்னால் புதைத்துள்ளதாகவும், அவரது மோட்டார் சைக்கிளையும் புதைத்துள்ளனர் எனும் சந்தேகத்தில் குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றில் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, குறித்த வீட்டில் வசித்து வந்த கணவன், மனைவி மற்றும் அவர்களுக்கு உதவிய குற்றத்தில் ஒருவருமாக மூவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.