ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (11.04.2022) திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற்றது.
இதன்போது கட்சிக்கான புதிய செயலாளராக திரு. நா.இரட்ணலிங்கம் (குரு) அவர்கள் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
தொடர்ந்து கட்சியின் மகாநாடு தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது, மகாநாட்டை விரைவில் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டடதுடன், மகாநாட்டுக்கான ஏற்பாட்டுக்குழுவும் தெரிவுசெய்யப்பட்டது.
தொடர்ந்து, சமகால அரசியல் நிலைமைகள், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஜனாதிபதியை சந்தித்தமை மற்றும் சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தினுடைய பிரச்சினைகள் சம்பந்தமான விடயங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியிலே முடிவுகளை எடுப்பதற்கு முயற்சிக்கிறோம். அப்படியானதொரு முடிவுதான் ஒரு பலம்வாய்ந்த முடிவாக இருக்குமென நம்புகிறோம் என்று தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.