வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இன்றையதினம் (13.04.2022) புதன்கிழமை காலை 9.30 மணியளவில் முன்பள்ளியின் அதிபர் திருமதி மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றது.
சுவிஸ் புளொட் தோழர்களின் பூரண அனுசரணையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும், சிறப்பு விருந்தினராக கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினரும் ஆசிரியருமான சு.காண்டீபன் அவர்களும்,
கௌரவ விருந்தினர்களாக கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், வவுனியா ஆட்டோ சங்கத் தலைவருமான செ.ரவீந்திரன், முன்பள்ளிகளின் மாவட்ட இணைப்பாளர் திருமதி அருள்வேல்நாயகி, திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் சந்திரசேகரம் ரவி, மாதர் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் தெய்வானை கணேசநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் கௌரவித்து அழைத்துவரப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள்,இசைவும் அசைவும், வினோத உடை நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.
நிகழ்வில் பிற முன்பள்ளிகளின் ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.