கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டங்களை கண்காணிப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் நடவடிக்கைகள் அமைதியான முறையில் நடைபெறுகிறதா, எதிர்ப்பு வெளியில் ஏதேனும் தாக்கங்கள் உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிப்பதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோரின் கூடாரத்தை அகற்றியமை தொடர்பில் முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், சனிக்கிழமை (16) காலி முகத்திடலில் பொலிஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பின்னர் அகற்றப்பட்டிருந்தன.

அதன்பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்ட ஆணைக்குழு, பிரஜைகள் அமைதியாக ஒன்றுகூடுவதை சட்டவிரோத முறைமைகள் ஊடாக தடுக்க முயற்சிப்பது அடிப்படை உரிமை மீறல் என மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

அமைதியாக ஒன்றுகூடுவதற்கு பிரஜைகளுக்கு உள்ள உரிமை, அரசியலமைப்பு ஊடாக பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.