24.04.1984ல் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் மரணித்த பொதுவுடைமைவாதி, காந்தீய செயற்பாட்டாளர், “விடுதலை” இதழாசிரியர், கழகத்தின் தளபதி தோழர் பார்த்தன் (இராஜதுரை ஜெயச்சந்திரன்) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

தோழர் பார்த்தன்
இரா.ஜெயச்சந்திரன்

மலர்வு – 06.07.1959
உதிர்வு – 24.04.1984

பாட்டாளி மக்களின் மறுவாழ்விற்காகவும் பாதுகாப்புக்காகவும் அயராது பாடுபட்டவர்.

திருமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் மாணவராக இருந்தபோது கல்வியில் சிங்கள திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தவர்.

சிங்கள திணிப்புக்கு எதிராக வேலை நிறுத்தம், கடையடைப்புக்களிலும் ஈடுபட்டவாறு தமிழர் உரிமைப் போராட்டத்திற்கு தன்னை இணைத்துக் கொண்டார்.

1970ல் பாடசாiலையில் சிங்கள திணிப்புக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் தெளிவுபடுத்தலை மேற்கொண்டு சிங்கள திணிப்பை தடுத்து நிறுத்திய போராளியாக உருவெடுத்தார்.

அத்துமீறி சிங்கள குடியேற்றம், அடக்குமுறைகள் என்பவற்றுக்கு எதிராக போராடவென தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

1977ல் பேரினவாத வெறியர்களால் தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படையினருக்கும், காடையர்களுக்கும் எதிராக தமிழ் மக்களைக் காப்பதற்காக ஆயுதமேந்தி போராடினார்.

பொதுவுடமை சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்ட இவர், மக்களை அரசியல் மயப்படுத்தவும், உரிமைப் போராட்டத்திற்காக ஆயுதமேந்த வைக்கும் நீண்டகால போராட்டக் கொள்கையை உள்ளடக்கிய புளொட் அமைப்பில் 1980ல் தன்னை இணைத்துக் கொண்டார்.

இவர் பல பயிற்சி முகாம்களையும் நடத்தி பயிற்சி ஆசிரியராகவும் திகழ்ந்தார்.

பேரினவாதிகளால் அடித்து விரட்டப்பட்டு ஏதிலிகளாகிய மலையக மக்களை காந்தீய அமைப்பு மூலம் வடக்கு கிழக்கில் குடியமர்த்தி வாழ்வாதார உதவிகளையும் செய்து வந்தார்.

திருமலை காந்தீய அமைப்பின் செயலாளராக செயலாற்றியதுடன் புளொட் அமைப்பின் திருமலை மாவட்ட செயலாளராகவும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார்.

விடுதலை என்ற செய்தித் தாளின் ஆசிரியராகவும் பணியாற்றி மக்களை எழுச்சி கொள்ள வைக்கும் பணிகளில் ஈடுபட்டார்.

1983ல் மேன்காமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியர் வேலை இவருக்கு கிடைத்தது.

இனவாத பாசிச அரசினால் கொண்டு வரப்பட்ட பிரிவினை எதிர்ப்பு சத்தியப் பிரமாண சட்டத்தை எதிர்த்து ஆசிரியர் பணியை துறந்ததுடன் எமது மக்களுக்காக முழுநேர தலைமறைவு வாழ்க்கையினைத் தொடர்ந்தார்.

கொக்குவில் பகுதியில் தோழர்களுடன் நின்றிருந்தவேளை படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது ஒரு ஆயுதத்தை மட்டுமே வைத்துக்கொண்டு படையினருடன் சமர் செய்து வெற்றிகொண்டு தோழர்களை பாதுகாத்தார்.

தமிழ் மக்களின் விடிவிற்காக உயிரைப் பணயம் வைத்து செயற்பட்டு வந்தார்.

மட்டக்களப்பு சிறையுடைப்பில் முக்கிய பங்காற்றி சிறை மீண்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினார்.

மலையக மக்களை ஒடுக்கு முறையில் இருந்து மீட்க அவர்களையும் உரிமைப் போராட்டத்திற்காக ஆயுதம் ஏந்தவைக்க ஆயுதப் பயிற்சியளிக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டார்.

இதனையடுத்து இவரை கண்ட இடத்தில் சுடும்படி அரசாங்கம் உத்தரவிட்டது.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது இவர் கைது செய்யப்பட்டார்.

கடும் சித்திரவதைகளுக்கு பின்னர் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அங்கும் சித்திரவதைக்கு உள்ளான நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றபோது பொலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.