மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து இன்று (25) உத்தரவிட்ட கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்தார்.

இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே மேற்குறிப்பிட்ட உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 136(1)(அ) பிரிவின் பிரகாரம் நுகேகொட நலங்காராமதிபதி தினியாவல பாலித தேரர் தனிப்பட்ட முறைப்பாட்டின் மூலம் மனு தாக்கல் செய்துள்ளார்.

2014ஆம் ஆண்டு அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய போது இலங்கை அரசாங்கம், அமெரிக்காவின் சிஐஏ நிறுவனத்தின் ஆதரவாளரான இமாத் ஷா சுபேரி என்ற அமெரிக்க வர்த்தகருக்கு மத்திய வங்கியின் ஊடாக 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், அரசியலமைப்பின் 150ஆவது சரத்தை மீறி, பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவையின் முன் அனுமதியின்றி 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ ஆஜராகியிருந்தார்.

இதேவேளை, முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை உத்தரவை மே மாதம் 2 ஆம் திகதி வரை நீட்டிக்குமாறும் அவருக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல, கடந்த 18ஆம் திகதி கட்டளையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.