உள்ளூர் வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்காக புலம்பெயர்ந்தோரின் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung வட மாகாண வணிக சமூகத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், அங்கு பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அதன் ஒரு கட்டமாக வட மாகாண வணிக சமூகத்தினரை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், தற்போதைய சவால்கள், பொருளாதார மீட்சிகள் குறித்து கலந்துரையாடியதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரசியல், பாதுகாப்பு நிலைமைகள் குறித்து, வட மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோரை சந்தித்து அமெரிக்க தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.
தேசிய நல்லிணக்கம், ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் முக்கியத்துவம் தொடர்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து அமெரிக்க தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.
இதனிடையே, மனித உரிமைகள் மற்றும் ஆளுகை தொடர்பான சவால்கள் குறித்து தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்து அமெரிக்க தூதுவர் கலந்துரையாடியதாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கிற்கான விஜயத்தின் போது மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவர்களுக்கு காணப்படும் வாயப்புகள் குறித்து தாம் நேரடியாக கேட்டறிந்துகொண்டதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.
போரின் தாக்கம், மனித உரிமைகள் தொடர்பான கரிசனைகள் மற்றும் வடக்கின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து சிறந்த புரிதலை தான் பெற்றுக்கொண்டதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்ததாக, இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.