அரசாங்கத்தில் இருந்து விலகிய 11 சுயாதீன கட்சிகளின் தலைவர்கள் இன்று (29) காலை ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அக்கலந்துரையாடலில் தாம் முன்வைத்த யோசனைகளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக கலந்துரையாடலில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“இடைக்கால ஆட்சியுடன் கூடிய சர்வகட்சி அரசாங்கம் அதிகபட்சம் ஓராண்டு வரை நீடிக்கும். அதன்படி, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான அனைத்துப் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.”

“பிரதமரின் பதவி விலகல் பற்றி பேசவில்லை. அனைத்து கட்சிகளையும் இணைப்பது தொடர்பிலேயே பேசினோம். இனி மற்ற அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும். அவர்களை ஒன்றிணைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”

“என்ன செய்ய வேண்டுமோ அதைச் நான் செய்வதாகக் ஜனாதிபதி கூறினார். தேவைப்பட்டால் அழைத்து வாருங்கள் நான் பேசுகிறேன் என்றார்.

“இப்போது இங்கு மூன்று குழுக்கள் உள்ளன. ஜனாதிபதி மற்றும் அவரது குழு, பிரதமர் மற்றும் அவரது குழு, எமது அணி.”

“எமது கலந்துரையாடலை தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

“ பதவி ஏற்ற இரண்டு அமைச்சர்களும் மன வருத்தத்தில் இருப்பதாகவும், அவர்கள் தொடர்பில் வேறு எந்த தீர்மானமும் எடுக்க முடியாது என்றும் ஜனாதிபதி கூறினார்.