எரிபொருள் போக்குவரத்துக்கு உடனடியாக புதிய விநியோகஸ்தர்களை பதிவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கடமைக்கு சமுகமளிக்காத விநியோகஸ்தர்களின் அனுமதியை இரத்து செய்யுமாறும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பதிலளித்து எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விடுத்த டுவிட்டர் பதிவிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள், அரசுக்கு சொந்தமான பௌசர்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சொந்தமான பௌசர்கள் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தனியார் வாடகை பௌசர்கள் மூலம் சேவைகள் தொடரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்கு சொந்தமான 84 பௌசர்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சொந்தமான 103 பௌசர்கள் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத 194 வாடகை பௌசர்கள் உட்பட 981 பௌசர்கள் மூலம் இன்று பிற்பகல் 4 மணிக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

தேவைக்கேற்ற ஓட்டோ டீசல், சுப்பர் டீசல், 92 ரக பெற்றொல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் 95 ரக பெற்றோல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.