ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் தாம் ஒருபோதும் இணையப்போவதில்லை என சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அநுர தலைமையிலான தேசிய மக்கள் முன்னணி என்பன அறிவித்துள்ளன.

சர்வமதத் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நம்பிக்கைக்குரிய ஜனாதிபதி ஒருவரின் கீழேயே இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். எனினும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே அவருடன் இ​டைக்கால அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என்றார்.

நாடு தற்போது முகங்கொடுக்கம் பிரச்சினைகளை ஜனாதிபதியே உருவாக்கியதாக இதன்போது தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அரசாங்கத்தையும், ஜனாதிபதியும் பதவி விலக வேண்டுமென்றே மக்கள் கோருகிறார்கள். எனவே ஜனாதிபதியுடன் இணைந்து ஒருபோதும் இடைக்கால அரசாங்கத்தை  அமைக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போ​தைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் உடனடியாக தேர்தல் ஒன்றுக்கு செல்வதே சரி​ எனவும் கூறினார்.