பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் இன்று காலை 11.30 அளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் சுமார் 2 மணிநேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சீவீகே.சிவஞானம், ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது தற்போதைய நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்துரைத்த அண்ணாமலை அவர்கள், மோடி அவர்களின் அரசாங்கம் தமிழ் மக்களை நிச்சயம் கைவிட மாட்டாது. தமிழ் மக்களின் நலனில் மோடி அவர்கள் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். அவர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வினை பெற்று தர முயற்சிப்பார் என்று தெரிவித்ததோடு, இலங்கையின் இன்றைய நிலையில் பொருளாதார உதவிகளை அனுப்புகின்றமை பற்றியும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, இது ஒரு நல்ல விடயம் இன்றைய சூழ்நிலையில் நிச்சயமாக இலங்கையின் அனைத்து மக்களுக்கும் கொடுக்கட்பட வேண்டிய உதவிகள்தான். இந்த மனிதாபிமான உதவிகள் தொடரவேண்டும் என கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர்.

இது எங்கள் அயல்நாடு. இலங்கையை எங்களுடைய ஒரு முக்கிய நாடாகவே பார்க்கின்றோம். ஆகவே தொடர்ந்தும் உதவுவோம் என அண்ணாமலை அவர்கள் தெரிவித்தார்.