அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கையளிக்கப்பட்டுள்ளன. அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் நாட்கள் தொடர்பில் அறிவிக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியினர் கோரிக்கை விடுத்துதனர்.

பாராளுமன்றத்தில், நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள   பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதலை வன்மையாக கண்டித்த ஐக்கிய மக்கள் சக்தியினர், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுக்கும் திகதியை கேட்டுநின்றனர். அப்போது சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேசான் வித்தானகே தலைமைத்தாங்கிக்கொண்டிருந்தார்.

இதனிடை​யே எழுந்த ஹரின் பெர்ணான்டோ எம்.பி, சபாநாயகர் சபைக்குள் வராவிடின் அவரை நாங்கள் வீட்டுச் சிறையில் வைப்போம். மக்களை பாராளுமன்றத்துக்குள் கொண்டுவரும் என்று அச்சுறுத்தினார். இந்நிலையிலேயே சபை நடைவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

எனினும், சபைக்குள் சற்றுமுன்னர் பிரவேசித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சபையை இம்மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.