நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட கலவரங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அவர்களுள் இரண்டு அரசியல்வாதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிட்டம்புவவில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமகீர்த்தி அத்துகோரள அவர்களில் ஒருவராவார்.

மற்றைய நபர் இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஏ.வி. சரத் குமார ஆவார்.

இமதுவ பிரதேச சபைத் தலைவரின் வீடு நேற்றிரவு தாக்கப்பட்டதாகவும், சம்பவத்தில் காயமடைந்த தலைவர் இமதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பாதுகாப்புப் படையை சேர்ந்த இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்ட கலவரம் காரணமாக நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், இன்று காலை காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகையில் இடம்பெற்ற மோதல்களில் காயமடைந்த 219 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் அரசியல்வாதிகள் எவரும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.