ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக ஜோதிடரான ஞான அக்காவின் வீடும் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு (09) பல பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீயிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன, கெஹலிய ரம்புக்வெல்ல, காமினி லொகுகே, விமல் வீரவங்ச, சனத் நிஷாந்த, ரோஹித அபேகுணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, கனக ஹேரத், சாந்த பண்டார, அருந்திகா பெர்ணான்டோ, இந்திக அனுருத்த மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோரின் வீடுகள் தீயிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், நாடளாவிய ரீதியில் பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், குருநாகலிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் வீடொன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி.ஏ.ராஜபக்ஷ மற்றும் தந்தினா ராஜபக்ஷ ஆகியோரின் மெதமுலானையில் உள்ள நினைவுச் சின்னங்களும் சில நபர்களால் உடைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, வடரெக சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

வெளி நிர்மாணப் பணிகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் சிறைச்சாலை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறைச்சாலை முகாமுக்குத் திரும்பும் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கைதிகள் குழுவொன்று காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்றும் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.