ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மெய்நிகர் வழி மத்தியகுழுக் கூட்டம் இன்று (15.05.2022 ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 12.30 மணிவரை, கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக, கட்சியின் ஸ்தாபகரான அமரர் தோழர். க. உமாமகேஸ்வரன் அவர்களையும் மறைந்த கழகக் கண்மணிகள் மற்றும் சக அமைப்புப் போராளிகள், பொதுமக்களையும் நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதார அரசியல் நிலைமைகள், நாடாளுமன்ற அரசியலில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள், மக்கள் முகம் கொடுக்கும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அரசாட்சியில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என விரும்பும் அநேக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும், அதே நேரத்தில் மக்களின் வாழ்க்கைக்கான நாளாந்த நெருக்கடிகளில் இருந்து முழு நாடும் மீண்டெழக் கிடைக்கும் வாய்ப்புக்களுக்கு தடையை ஏற்படுத்தும் விதமான செயற்பாடுகளை இயன்றவரையிலும் தவிர்க்க வேண்டும் எனவும் மத்தியகுழுக் கூட்டத்தில் அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டன.

அதே நேரத்தில், ஜனாதிபதிக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்புக்கு வருமாக இருந்தால் பிரேரணைக்கு ஆதரவாக கட்சி வாக்களிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இன்றைய கோட்டா – ரணில் அரசாங்கத்தின் எதிர்காலம் தொடர்பாக எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் ஆராயப்பட்டபோது, ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் உள்ள நிலைமைகளை ஆராய்ந்து, கூட்டமைப்பின் சக பங்காளிக் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து, கூட்டமைப்பாக ஒருமித்த தீர்மானங்களை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

கூட்டமைப்பாக அவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வதில் நெருக்கடிகள் தோன்றுமாயின், தேவையேற்படின் மத்தியகுழுவினைக் கூட்டி தீர்மானங்களை மேற்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டது.