வவுனியா – கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் கல்வி கற்ற 16 வயதான ராசேந்திரன் யதுர்சி நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற பகுதிநேர வகுப்பில் கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச்சென்றார். வீட்டிலிருந்து சற்று தூரத்தில் உள்ள பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற சிறுமி, மாலை 5.30 வரையும் வீடு திரும்பாததால் உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் சிறுமியை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இரவு 9 மணியை கடக்கும்போது சிறுமி உயிரிழந்த நிலையில், சடலம் கிணற்றுக்குள் இருக்கின்றமை தெரியவந்தது.

யதுர்சியின் பாடப்புத்தகங்களும் பாதணிகளும் கிணற்றுக்கு அருகேயுள்ள பற்றைக்குள் இருந்து கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தடயங்களை கண்டறிவதற்காக பொலிஸார் மோப்ப நாய்களை பயன்படுத்தினர். மோப்ப நாய்கள் மூடப்பட்டிருந்த கடையொன்றுக்குள் சென்று நின்றுள்ளன. குறித்த கடைக்குள் இருந்து சில மதுபான போத்தல்களும் கயிறும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடு சென்ற தாய் தொடர்பில் தகவல் கிடைக்காத நிலையில், ராசேந்திரன் யதுர்சியின் தந்தையும் மறுமணம் புரிந்துள்ளார்.

யதுர்சியும் அவரது சகோதரியும் ஏற்கனவே தங்கியிருந்த வீட்டில் துன்புறுத்தல்களுக்கு இலக்கானதால், கணேசபுரம் பகுதியிலுள்ள மாமாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

யதுர்சி கொலை செய்யப்பட்டாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நாளை (01) நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா – நெளுங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.