வவுனியா – கணேசபுரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி ராசேந்திரன் யதுர்சி நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று (01) முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்பதும் பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
கணேசபுரம் 08 ஆம் ஒழுங்கையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 16 வயது மாணவி ராசேந்திரன் யதுர்சி நேற்று முன்தினம் இரவு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று முன்தினம் மாலை மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவி வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது மாணவியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.