மின்சாரம் நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால் மக்கள்
அல்லல்படுகின்றனர். எங்களைப் பொறுத்தமட்டில் டொலர் தட்டுப்பாடும் பொருளாதாரப் பின்னடைவும் இருக்கின்ற போது டொலரை கொடுத்து வாங்கக்கூடிய எரிபொருள் மூலம் நடத்தப்படுகின்ற மின் உற்பத்தி நிலையங்களை நம்பியிருக்காமல் இயற்கை வளத்தால் கிடைக்கக் கூடிய மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை வரை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்குவதற்கு மிகப் பொருத்தமான இடமாக விளங்கும் கூறப்படுவதுடன் அந்தப் பகுதிகளில் மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் எவ்வளவு முக்கியம் என்பது தான் நாங்கள் பார்க்க வேண்டிய விடயம்.

காற்றாலை மற்றும் சூரிய ஒளியால் உருவாக்கப்படும் மின்சக்தி நிலையங்கள் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் உருவாக்கப்படும் மின்சக்தி நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கிலே காற்றாலை மின்சாரம் உருவாக்குவதற்கான முயற்சிகள் நடக்கிறபோது ஒரு விடயத்தை நாம் பார்க்க வேண்டும். இது ஒருவித பாதிப்பை ஏற்படுத்துமென மக்கள் மத்தியில் ஒரு பயம் உள்ளது. மின் உற்பத்தியால் கிடைக்கின்ற லாபத்தில் கட்டாயமாக ஒரு பகுதியை அந்த பகுதியில் உள்ள அபிவிருத்திக்கு ஒதுக்க வேண்டும். இது பல இடங்களில் இடம்பெறுகின்றது. தனியார் நிறுவனங்களோ வெளிநாட்டு நிறுவனங்களோ அதானி
குழுமமாகவோ இருக்கலாம் யாராக இருந்தாலும் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை கட்டாயமாக அந்த பகுதிக்கான அபிவிருத்தியில் ஒதுக்குவதற்கு முன்வர வேண்டும். இதனை ஒப்பந்தத்திலும் சேர்க்கவேண்டும்.

இந்தியா பொறுத்தவரை பல நெருக்கடியான நிலையில் சமயத்தில் இலங்கைக்கு உதவி செய்து வருகின்றது. நிச்சயமாக அதற்காக இந்தியப் பிரதமர் மோடிக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் அதிகளவு உணவு பொருட்களை சேகரித்து தற்போது அவை நாடு முழுவதும் கொடுக்கப்படுகின்றது. முதலில் வடக்கு கிழக்கு மலையக பகுதிகளுக்கே இந்த உதவிகளை வழங்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அதில் உள்ள குறையை நாம் சுட்டிக் காட்டிய பின்னர் முழு நாட்டுக்கும் வழங்க முதல்வர் அவர்கள் தீர்மானித்தார்கள்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேசுகின்ற போது இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்கான முயற்சியில் முழு நாடும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

எங்களுடைய பகுதியில் அத்துமீறி செய்கின்ற விடயங்களை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் உள்ள காணியை பலவந்தமாக எடுப்பதற்கு கோட்டாபய கடற்படை முகாமில் இருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு அது மக்கள் போராட்டத்தால் பின்னுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோல யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்றுறையிலுமா காணி எடுப்பதற்கான முஸ்தீபுகள் காணப்படுகின்றது.

இவர்கள் இவ்வாறெல்லாம் செய்து கொண்டிருக்கின்ற போது எப்படி நாங்கள் முழுமையான மனதுடன் இந்த பொருளாதார சிக்கலை தீர்க்க உதவமுடியும்.

புலம்பெயர் தமிழர்கள் இங்குள்ள பொருளாதார நெருக்கடிக்கு
உதவ வேண்டும் என்ற கோரிக்கை மிகப்பெரிய அளவில் முன்வைக்கப்படுகின்றது.

ஜனாதிபதியுடனான சர்வகட்சி மாநாட்டிலும் இது பற்றி பேசப்பட்டது அப்போதும் நாம் கூறியது ஆகக்குறைந்தது இவ்வாறான அத்துமீறல்களையாவது தமிழர் பகுதியில் தடுக்க வேண்டுமென்றோம்.

அப்போது அது பற்றி தனக்கு தெரியாதென கைவிரித்தார். அவர் கூறிய பின்பும் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றன. ஆகவே இவ்வாறான விடயங்களை நிறுத்தினால் நாட்டிலுள்ள பொருளாதாரப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் இதை அரசாங்கம் செய்ய வேண்டும்.