பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் இலங்கைக்கான நிதியுதவியைப் பெறுவதற்கும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்  ஜி.எல்.பீரிஸ் உதவிகளை கோரியுள்ளார்.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பில், சிங்கப்பூருக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜி.எல்.பீரிஸ்,  இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கான நிதியுதவியைப் பெறல், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரித்தல், சிங்கப்பூருக்கான இலங்கை ஏற்றுமதிகளுக்கான வாய்ப்புக்களை அதிகரித்தல், உள்ளிட்டவற்றுக்கான உதவிகளையும் ஜி.எல்.பீரிஸ் கோரியுள்ளார்.

அத்துடன், இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆதரவையும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  தேவையான மருத்துவப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கியதன் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பு பிரதிபலிப்பை ஆதரிக்கும் வகையில் கொவிட்-19 தொற்றுநோய் முழுவதும் நீட்டிக்கப்பட்ட விரிவான உதவிகளுக்காகவும், சிங்கப்பூர் மற்றும் வெளிநாடுகளில் டெமாசெக் அறக்கட்டளை மூலம் இலங்கைக்கு முகக்கவசங்களை வழங்கியமைக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

 செஞ்சிலுவைச் சங்கம் மனிதாபிமான உதவிக்காக அண்மையில் செய்த வேண்டுகோளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலர்களை உறுதியளித்தமைக்கும் நன்றி கூறினார்